தேசிய செய்திகள்
இந்தி மக்களுக்கு எதிரான பேச்சு; சீமான் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? - பிரசாந்த் கிஷோர் கேள்வி
தேசிய செய்திகள்

இந்தி மக்களுக்கு எதிரான பேச்சு; சீமான் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? - பிரசாந்த் கிஷோர் கேள்வி

தினத்தந்தி
|
10 March 2023 3:30 PM IST

சீமான் மீது உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று பிரசாந்த் கிஷோர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாட்னா,

தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் 2021ஆம் ஆண்டில் மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க. கட்சிகளுக்கு தேர்தல் வியூக ஆலோசகராக இருந்து பணியாற்றினார்.

பின்னர் தேர்தல் வியூக நிபுணர் பணியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த அவர், பீகாரில் அரசியல் கட்சி ஒன்றை உருவாக்கும் வகையில் ஜன் சுராஜ் என்ற பெயரில் மூவாயிரம் கிலோ மீட்டர் நீள பாதயாத்திரையை தொடங்கி நடத்தி பீகார் அரசியலில் முக்கிய நபராக திகழ்ந்து வருகிறார்.

அண்மையில் தமிழ்நாட்டில் வேலை செய்து வரும் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக போலியான வீடியோக்கள் பரவியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து கருத்து தெரிவித்த பிரசாந்த் கிஷோர், போலியான வீடியோக்கள் பகிரப்பட்டாலும், நடந்த சம்பவங்களின் உண்மைகளில் இருந்து யாரும் விலகி செல்லக் கூடாது என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் பிரசாந்த் கிஷோர் தனது டுவிட்டர் பக்கத்தில், நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் பேசிய வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் பிரச்சாரத்தின் போது, வடமாநில தொழிலாளர்கள் குறித்து சீமான் பேசிய கருத்துக்கள், தமிழ்நாட்டில் உள்ள இந்தி மக்களுக்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையில் இருப்பதாகவும், இது குறித்து சீமான் மீது உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்றும் பிரசாந்த் கிஷோர் கேள்வி எழுப்பியுள்ளார்.


மேலும் செய்திகள்